Monday, February 28, 2011

சத்யா ...

இந்த வார்த்தைகள் எழுப்பும் சப்தங்களால்...
இந்த உயிர் முழுதும் காதலால்
நனைந்து தான் போகிறது...

இருகண்வீசிப் போன  உன் ஒரு துளிப்  பார்வை பட்டு 
தெறித்த அம் முதல் கணங்களை.,
நெஞ்சம் மறக்கவே மறுக்கிறது.  

ஒருநாள் நேரில்...
பார்க்காமல் பார்த்தாய்..
பேசாமல் பேசினாய்...(உன் சிரிப்பினில் கரைந்த நானும்)...
இதயங்களை மாற்றிக்கொண்டோம் என்று கூடதெரியாமல்...

சுவாசிக்க  நீ வேண்டும்..
உன் மூச்சுக்காற்று எனக்கு மட்டும்...

பெண்மையை உணர்த்தியவள் நீ..
உணர்கிறேன் நானும்...
ஒரு தாய்மையை .,
நீ என் குழந்தையாய்...

பரிதவிக்கும் உனதன்பில்
காதலில்
வாழ்க்கையில்
புதைந்து போகவே துடித்துப்போகிறேன் ...
உன்னைப் போல...

என்மீதான உனதன்பை
எஞ்சுவதற்கு
முயன்று முயன்று
தோற்றுப் போகிறேன்...
இந்த
தோற்றலும் கூட
சுகம் தான் எனக்கு...

Sunday, August 22, 2010

தலைநகரம்

நகரம் முறுக்குவளித்து
தெரு விளக்குகள் அணைக்கும் நேரம்.
வாசல் கதவுகளில்
தொங்கும் பையில்
வந்து விழும் ஆவின்களும்
அதனருகே நாளிதழ்களும் .
மேல்ரக நாய்கள் சில
மனிதர்களை இழுத்துக்கொண்டு
மூச்சிரைக்கும் காலை .

கடற்கரை.

எட்டிப்பார்க்கும் சூரியன்
நடனமாடும் நங்கைக் கப்பல்கள் .
காதலர்கள் கைகோர்த்தமரும் இடம்
காலையில் கழிப்பறையாய்.

மணல் முழுதும் கால்தடங்கள் .

                                  காய்ந்த பூக்கள் .
                                  உடைந்த வளையல்கள் .
                                  கிழிந்த பட்டங்கள்.
                                  எல்லாம் நினைவுகளல்ல ...

காற்று வாங்கும் படலம் விடுத்து

பேருந்துப் பயணங்கள்
பைக் சாகசங்கள்
வாகனப் பேரணிகள்.
நெரிசல்கள்
இரைச்சல்கள்
வழியிலும் மனதிலும்.
அதிகம் மனிதர்கள் .
அநேகர் தனியர்கள்.

முகவரி கேட்டு அலையும் சிலர்

முகவரியில்லா முடிவுகளில் சிலர் .

நகரத்தில் நதிகள் கூவங்களாய்.

                                     சிலர் நரம்புகளிலும் புரையோடிப்பாய்கிறது. 
நாகரிகம் வளர்கிறதாம் .?!!!
                                    பண்பாடுகளைத் தேய்த்து
                                    மொழிகளை மிதித்து
                                    மனிதம் சிதைத்து ...

மேதாவித்தனம் அதிகம்

 மேதாவிகள்
குறைவு .

வயிறுபுடைக்கத் தின்று 

பல்குத்திக் கொண்டே
சில்லறை இல்லை என்கிறான்
கையேந்தும் காரிகையிடம்.
நவீன உடை பிச்சைக்காரன்.
நகர்கிறாள் அடுத்த கடவுளிடம்...

விண்ணோக்கி கண்ணாடி மாளிகைகள் அடுக்கடுக்காய் .

பிம்பங்களிளெல்லாம்
குடிசைகள்
குப்பைகள்
கும்பல்களாய்...

வியர்வைகளை உறிஞ்சியெடுத்து

வெறுத்தோய்கிறது சூரியன் .
மின்னொளியில் நகரம்
இருள் மட்டும் தேடும் சிலரது அவலம் .

கண்பேசும் காதலில்

கைகளும் கால்களும்
பேசிக்கொள்ளும் .
பொதுவிடம் தனியிடம் என்பதிங்கில்லை.
சமத்துவம்.
வாகனங்கள் ஓய்வெடுக்க
நிறுத்தங்கள் நிசப்தமாகிறது.
சைகைகள் மஞ்சளாகிறது.

இரவுக்கோழிகள்

விழித்தெரிந்து பறக்கின்றன .
இன்னொரு கலாச்சாரம் புகுத்தவேண்டி.....
 
புதுமைவாதிகளல்ல .,
புலனின்ப ஜாதிகள்.

காட்சிகள் மாறிக்கொண்டே

கண்மூடி அயர்கிறது நகரம்
அனைவரையும் தோளில் சாய்த்து
அன்னையாக...

என்றும் அன்புடன்

என்ஸ்ரீவெங்கடேஷ் ...   

புதிதாய் நான்


வானம் ...
வாழ்க்கை ...
வாய்ப்புக் காற்றுகளில்
வானளக்க எத்தனித்தேன் .
நிலவு தொடும் ஆசை எனக்கு.
நித்திரைகள் நிஜமானால்
நீள்வட்டம் நீந்திக் கடந்து செல்வேன் .

மின்னல்கள் என்வானில் .

மின்மினிப் பூச்சியென நான் .
நிலவென்று உனைக் கண்டேன் .
மின்னல்கள் மழையானது.
உன் சிரிப்பினில் நனைந்து போனேன்.
புல்வெளிகளில்
மழைத்துளி பனித்துளியாய்
என்மனக் காடுகளில் உன் காதல் காட்டாறாய் ...
வண்டுகள் வண்ணத்துப் பூச்சிகளோடு
பூக்களின் வாசமும்
உனதன்புப் பரிகாசங்களும்...
ஸ்வாசமாய்.

பூக்களை நேசிக்கிறேன்

பூ வாசமாய் நீ
முதன்மலராய் நீ ...
தீண்டிய விரல்களிலெல்லாம் மருதாணி
சிவப்பதோ  நீ ...
உன் கண்களில் நான்
கன்னக்குழிகளில் புதைந்ததும் நானே .

காதல் பூ கனியானது

காட்டாறும் நதியானது .
சுதந்திரக் காடுகளில்
அடிமையாய் நான் -
                                       -
நீ தான் என் அரசி.

கேட்காமலே கொடுத்துச் சென்றாய்

விடுதலை
பரிசாக கண்ணீர்த் துளிகள் .
எங்கு கற்றாய் இதயம் நொறுக்கிடும் பாடம்
எனக்குத் தெரியாமல் .

நாம் மயங்கிக் கிடந்த காடுகளில்

இப்போது
இலையுதிர்காலம் .
கிளையொடிர்காலம்...
பூக்கள் தேடிக் கிடக்கின்றேன் .
ஒரே முட்புதர்கள் .

நதி வறண்டது.

நானும் ,,,,,,,,,,,,,,, 
திசையெல்லாம் நீ .
தொடத்தான் முடியவில்லை - மாயை .
இறந்தது இதயம்
                   உபயம் - நீ
 மயானமாய் பூமி -
                                    -
மயானப் பூக்களில் வாசமில்லை .
பூமி வேண்டாம்
பூமி வேண்டாம் .
இலட்சிய வானில்

                      பறக்க மீண்டும் எத்தனிக்கிறேன்
.
 சிறகுகளைக் கிழித்துவிட்டாய்
சின்னாபின்னமாய்  உடைத்துவிட்டாய் .
நம்பிக்கைச் சிறகு என்னோடு
நட்புகளும் என்னோடு.
திமிராய்ப் பறப்பேன் - தீரா வெறியோடு ...

இம்முறை

நிலவுதொடும் ஆசையில்லை...

பால்வெளிகளில் தான்

எனது புல்வெளி .
பால் வீதிகளில் தான்
எனது கல்லூரி .
அதைத் தாண்டும் ஆயிரமாயிரம்  ஆசை
                                                                       கனவு
                                                                        இலட்சியமாய் ...
நெஞ்சில் எரிகிற நெருப்பில்
சூரியனும் சாந்தமாகும்
சூழ்நிலைகள் சாத்தியமாகும் ...

என்றும் அன்புடன்

என்ஸ்ரீவெங்கடேஷ் ...